கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என வேண்டுதலுக்காகவும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா விருதுநகர் மாவட்டம் வந்திருந்தார். இந்நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரௌபதி முர்மு 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறுவார். இந்த ஜனாதிபதி தேர்தல், தமிழகத்தில் போலியாக சமூகநீதி பேசுபவர்களை, செயல்படுபவர்களை அம்மணப்படுத்தி காட்டியிருக்கிறது.
அதேபோல துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மார்க்கட் ஆல்வா என்பவர், அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் 3,600 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக காங்கிரஸின் முதல் குடும்பம் மீது குற்றம் சுமத்தியவர். இந்த காரணத்திற்காகவே அவர் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்படியிருக்கையில், காங்கிரஸ் அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது என்றால், தேசத்துரோக காங்கிரஸ் ஆதரவு எனக்கு தேவையில்லை என்று அவர் கூறியிருக்க வேண்டும். ஆக எதிர்கட்சிகளின் இந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஊழல், சமூகவிரோத தீயசக்திகளின் மொத்த உருவம். எனவே, துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ஜெக்தீப் தங்கரும் வெற்றி பெறுவார்.
இருக்கன்குடி கோயிலை சுற்றிலும் தற்போது மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் மணல் அள்ளத் தடை விதித்த நிலையில் தற்போது இந்த தடையை தி.மு.க. அரசு நீக்கி உள்ளது. மணல் அள்ளுவது, இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தையும், மண்ணின் ஸ்திரத்தன்மையையும் அழித்துவிடும் என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே மணல் அள்ள வழங்கப்பட்ட அனுமதியினை ரத்து செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவத்திற்கு அமைச்சர்கள் இதுவரையில் ஆறுதல் செல்லாததற்கு காரணம் இறந்த மாணவி இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுதான். இந்து செத்தால் இழவுக்கு அழக்கூட ஆள் இல்லை என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தில் மணப்பாறையில் ஆழ்துளை கிணறு சம்பவத்திற்கும், சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த சம்பவத்திற்கும் தி.மு.க.நேரில் சென்று ஆறுதல் சொன்னது. இறந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதுதான் அதற்கு காரணம்.
திராவிட மாடல் என்பது இந்துக்களுக்கு எதிரான மாடல். தமிழகத்தில் கிறிஸ்தவ ஆட்சித்தான் நடந்து கொண்டிருக்கிறது என மு.க.ஸ்டாலினே ஒருமுறை பேசியுள்ளார். ஆகவே, முழுக்க, முழுக்க இந்துக்களுக்கு எதிராக, இந்து விரோத தீயசக்தி ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை எவ்வளவு விரைவாக தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக செய்வதுதான் இந்துக்களுக்கு நல்லது” என்றார் ஆவேசமாக.