நடிகர் மாதவனின் 17 வயது மகன் வேதாந்த், நீச்சல் போட்டியில் தேசிய அளவில் புதிய சாதனைப் படைத்து தங்கம் வென்று சாதித்துள்ளார்.
மாதவனின் மகன் வேதாந்த், தனது தந்தைப்போல் சினிமாத்துறையிலேயே கால் பதிக்காமல் நீச்சல் போட்டிகளில் சிறுவயது முதல் கலந்துகொண்டு சாதித்து வருகிறார். அத்துடன் தங்கம், வெள்ளி போன்ற பதக்கங்களையும் வென்று நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். கடந்த ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற 47-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 17 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின், 1500 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு இரண்டாம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் வேதாந்த் மாதவன். இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறும் 48-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். கலிங்கா அரங்கத்தில் பிஜூ பட்நாயக் நீச்சல் குளத்தில் நடைபெற்ற 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் வேதாந்த் மாதவன்.
கடந்த 2017-ம் ஆண்டு, 1500 மீ ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 16:06.43 விநாடிகளில் கடந்து அத்வைத் பேஜ் வைத்திருந்த தேசிய சாதனையை, தற்போது வேதாந்த் முறியடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தனது மகன் வேதாந்தின் இந்த வெற்றியை, நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் தேசிய ஜூனியர் சாதனை முறியடிக்கப்பட்டது என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் போட்டியின் காணொலியையும் நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார்.
Never say never . National Junior Record for 1500m freestyle broken. @VedaantMadhavan pic.twitter.com/Vx6R2PDfwc
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 17, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM