புதுடெல்லி: நீட் தேர்தல் ஆள்மாறாட்டம் செய்ய ஒரு சீட்டுக்கு ரூ20 லட்சம் வசூல் செய்யப்பட்ட பகீர் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 17ம் தேதி நடந்தது. டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், ஆள்மாறாட்டம் செய்த 8 பேர் கைதாகினர். இவர்களில் டெல்லியை சேர்ந்த சுஷில் ரஞ்சன் முக்கிய குற்றவாளி ஆவான்.இந்த மோசடி கும்பல் பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அரியானாவிலும் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தில் காட்டப்பட்டது போல் செயல்பட்டுள்ளனர். ஒரு மாணவருக்கு பதிலாக ஆள்மாற்றட்டம் செய்து தேர்வு எழுத ரூ20 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையில் ரூ5 லட்சம் நீட் தேர்வை மாணவருக்கு பதிலாக எழுதுபவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை இடைத்தரகர்கள் மற்றும் பிறரால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய மோசடியை தடுக்க, நீட் தேர்வுக்கான பாதுகாப்பு சோதனைகளை அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனர். ஆனாலும், இந்த மோசடி கும்பலானது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி நீட் அடையாள அட்டைகளை மாற்றியமைத்து எளிதாக தேர்வு அறைக்குள் நுழைந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், விண்ணப்பதாரர்களின் பயனர் ஐ.டி.கள் மற்றும் கடவுச்சொற்களை சேகரித்து, இந்த வழக்கில் 11 பேரின் பெயர்களை போலீசார் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.