நீட் விலக்கு மசோதாவுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது! பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பதில்…

சென்னை:  நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக கால வரையறை நிர்ணயிக்க இயலாது என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் பதில் தெரிவித்து உள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு,  தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு கோருகிற சட்ட வரைவு கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில், சுமார் ஒரு வருடமாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து, அதை மத்தியஅரசுக்கு கவர்னர் அனுப்பி வைத்தார்.  ஆனால், அந்த மசோதா பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பாராளுமன்றத்தில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், கேள்வி எழுப்பி இருந்தார். நீட் விலக்கு மசோதா மத்தியஅரசுக்கு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டு உள்ளதா ? அதனுடைய தற்போதைய நிலை என்ன? ஒப்புதல் வழி முறையில் என்ன முன்னேற்றங்கள்? என்ன கால வரையறைக்குள் முடிவு எடுக்கப்படும்? என்று கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதில் அளித்துள்ளார். அதில்,  ‘தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்ட பிரிவுகள் சட்ட வரைவு 2021’ அனுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு 02.05.2022 அன்று வந்து சேர்ந்தது.

தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை. அது போன்று மத்திய அமைச்சகங்கள்/ துறைகளின் கருத்து கேட்பு துவக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் இரண்டும் தங்களின் கருத்துக்களை அளித்துவிட்டன. அவற்றை தமிழ்நாடு அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 முறையே பகிர்ந்து கொண்டு கருத்துக்களை/ விளக்கங்களை கேட்டுள்ளோம். இது போன்ற பிரச்சினைகளில்  கலந்தாலோசனை நேரம் எடுக்கும்;  ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.