ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் உள்ள இந்துமல்கோட் எல்லைப் பகுதியில், நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து கூறிய நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது,
“இந்துமல்கோட் எல்லைப் பகுதியில் நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவரிடமிருந்து 11 இன்ச் நீள கத்தி, மத புத்தகங்கள் மற்றும் மணல் மூட்டைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் பாகிஸ்தானின் வடக்கு பஞ்சாபில் அமைந்துள்ள மண்டி பஹவுதீன் நகரைச் சேர்ந்த ரிஸ்வான் அஷ்ரப் என்றும் நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து கூறிய நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவியதும் தெரிய வந்தது. இதன் பின்னர், இவரை உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டோம்”. என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு செய்தி :
நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில், இந்தியா முழுவதும் தனக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களில் பதியப்பட்ட வழக்குத் தொடர்பாக தன்னை கைது செய்யக்கூடாது என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நூபுர் சர்மா தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்து மற்ற மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.