உச்ச நீதிமன்றத்தில், “மத்திய அரசு இதுவரை சீக்கியர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்களை மட்டுமே சிறுபான்மையினராக அறிவித்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, லடாக், பஞ்சாப் போன்ற நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்களுக்குச் சிறுபான்மை சமூகம் என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சில மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் 29 & 30-வது பிரிவுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட வேண்டும்.” என்று வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மாநில மக்கள்தொகை அடிப்படையில் சிறுபான்மை சமூகங்கள் மத அல்லது மொழி சார்ந்த சமூகங்களாக இருக்கலாம். நாகாலாந்து மற்றும் மிசோரமில் பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவர்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டாலோ அல்லது பஞ்சாப்பில் சீக்கியர்களைச் சிறுபான்மை சமூகமாகக் கருதினாலோ அது நீதியின் கேலிக்கூத்து. மகாராஷ்டிராவில் கன்னடம் பேசும் ஒருவர் சிறுபான்மையினராக இருக்கலாம். அதே சமயம் மராத்தி பேசும் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வெளியே சிறுபான்மையினராக இருக்கிறார்.
எனவே, மொழிவாரி மற்றும் மத ரீதியாக சிறுபான்மையினர் யார் என மாநில வாரியாக முடிவு செய்யப்படும். இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் மாநிலங்களில் அவர்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படவில்லை… அல்லது சிறுபான்மையினரின் நன்மைகள் பறிக்கப்பட்டதென்றால் அதற்கான சரியான ஆதாரங்களை, இரண்டு வாரக்கால அவகாசத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.