ஏதாவது ஒரு பிசினஸ் செய்து பெரும் பணம் சம்பாதிப்பது ஒரு வகை. எந்தத் தொழிலையும் செய்யாமல், சரியான திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, பணத்தைப் பெருக்குவது இன்னொரு வகை. முதல் வழி, பலருக்கும் வாய்ப்பில்லை. இரண்டாவது வழிதான் பலருக்கும் சாத்தியம். ஆனால், இந்த இரண்டாவது வழியைப் பின்பற்ற நம் மக்கள் இன்னும் தயங்குவது ஏன் என்பதுதான் விசித்திரமான கேள்வியாக இருக்கிறது.
நீண்ட கால முதலீட்டின் மூலம் நம்முடைய பணத்தைப் பல மடங்காகப் பெருக்க உதவுவதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. இந்த முதலீட்டில் நம் நாட்டில் பான் கார்டு வைத்திருக்கும் 43.50 கோடி பேரில் வெறும் 3.36 கோடி பேர் மட்டுமே. இந்த 3.36 கோடி பேர் மியூச்சுவல் ஃபண்ட் 13 கோடி போலியோக்களைத் தொடங்கி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருப்பதாக ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது ஆம்ஃபி நிறுவனம். இந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.
* நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 2.5% பேர் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கின்றனர். இதுவே அமெரிக்காவில் 46 சதவிகிதமாகவும், சீனாவில் 44 சதவிகிதமாகவும், ஜப்பானில் 20 சதவிகிதமாகவும் இருக்கிறது என்பது நம் மக்களில் பலரும் இன்னும்கூட இந்த முதலீட்டை சீண்டவில்லை என்பதையே காட்டுகிறது.
* மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்புக்கும், நமது ஜி.டி.பி.க்கும் இடையிலான விகிததமானது நம் நாட்டில் 18 சதவிகிதமாக இருக்கிறது. இதுவே அமெரிக்காவில் 120 சதவிகிதமாகவும், கனடாவில் 81 சதவிகிதமாகவும் பிரான்சில் 80% சதவிகிதமாகவும் இருக்கிறது.
* நமது பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் சுமார் ரூ.150 லட்சம் கோடிக்கு மேல். இந்த டெபாசிட்டுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்புக்கும் இடையிலான விகிதமானது நம் நாட்டில் 20 சதவிகிதமாக இருக்கிறது. இதுவே அமெரிக்காவில் 161 சதவிகிதமாகவும், சீனாவில் 46 சதவிகிதமாகவும் ஜப்பானில் 29 சதவிகிதமாகவும் இருக்கிறது.
வளர்ந்த நாடுகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எல்லா மக்களுக்கும் விரும்பிப் பின்பற்றி வருகையில், நமது மக்கள் மட்டும் ஏன் மிகக் குறைந்த அளவே அதைத் தேர்வு செய்து, பின்பற்றி வருகின்றனர் என்பது மிக முக்கியமான கேள்வி. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.
முதல் காரணம், வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் பல பத்தாண்டுகளாகவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது மக்களுக்குக் கிடைத்து வருகிறது. ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை, 30 ஆண்டுகளாகத்தான் இந்த முதலீடு மக்களுக்குக் கிடைத்து வருகிறது. எனவே, இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் இன்னும் அதிகமான மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நோக்கி வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
இரண்டாவது முக்கியமான காரணம், முதலீடு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அவர்கள் இன்னும் சேமிப்பு என்கிற மனநிலையிலேயே இருக்கின்றனர். சேமிப்பு என்கிற நிலையைத் தாண்டி, முதலீடு என்கிற நிலைக்கு வராமலே இருக்கின்றனர். பணவீக்கம் என்றால் என்ன என்று தெரியாததால், ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போட்டு, சரியான லாபம் கிடைக்காமல் இருக்கின்றனர். காப்பீட்டுத் திட்டங்கள் தங்களைக் காப்பாற்றும் என்று நம்பி லட்சம் லட்சமாக பிரீமியம் கட்டும் மக்கள் இன்னும் பல லட்சம் பேர் நம்மிடம் இருக்கவே செய்கிறார்கள். காப்பீடு என்பது நம் வாழ்க்கைக்கான பாதுகாப்பு ஏற்பாடு. அது சேமிப்போ அல்லது முதலீடோ அல்ல என்பதை நம் மக்கள் எப்போது புரிந்துகொள்வார்களோ…!
மூன்றாவது முக்கியமான காரணம், நம் மக்களில் பலர் இன்னும்கூட தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகளில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பது. இந்த இரண்டிலும் பணம் போட்டால், அதை வீண் போகாது என்று நினைக்கிறார்கள். அதில் போட்ட பணம் எவ்வளவு, கிடைத்த லாபம் எவ்வளவு என்று கணக்கு பார்ப்பதே இல்லை. ஆனால், நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீண்ட பணம் போட்டால், தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் லாபத்தைவிட அதிக லாபம் கிடைக்கும் என்பதை பலரும் இன்னும் உணரவில்லை.
நான்காவது முக்கியமான காரணம், நம் மக்களில் ஒரு தரப்பினர் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் எஃப்.டி., இன்ஷுரன்ஸ் என்று கதியாகக் கிடைக்கும்போது, இன்னொரு தரப்பில் குறுகிய காலத்தில் பெரும் லாபம் சம்பாதித்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதை விட்டு, மாதந்தோறும் 5% – 10% வருமானம் தரும் பொன்ஸி திட்டங்களில் லட்சம் லட்சமாக பணத்தைப் போடுகின்றனர். இந்த அளவு லாபத்தை எந்த நிறுவனத்தினாலும் தரமுடியாது என்று நினைத்துப் பார்ப்பதே இல்லை.
அவர்கள் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும்; நமக்கு லாபம் கிடைத்தால் போதும் என்று நினைத்துப் பணத்தைப் போடுகிறார்கள். இந்த மோசடித் திட்டத்தை நடத்துபவர்கள் மக்கள் தரும் பணத்தை எடுத்து மக்களுக்கு திரும்பத் தருவார்கள். இதனால் பல ஆயிரம் பேர் மேலும் மேலும் பணத்தைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இப்படிச் சேரும் பணம் அத்தனையும் எடுத்துக் கொண்டு ஒரு நள்ளிரவில் திடீரென மாயமாகிவிடுவார்கள். இப்படி ஆயிரம் முறை மக்கள் ஏமாறினாலும், மீண்டும் மீண்டும் இந்த மோசடித் திட்டத்தில் சேரத்தான் மக்கள் துடிக்கிறார்களே தவிர, நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நோக்கி வரத் தயாரில்லை.
ஆனால், தற்போது படித்துவிட்டு வரும் இளைஞர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணவீக்கம் என்றால் என்ன என்று தெரிகிறது. மோசடித் திட்டங்களை உடனே கண்டுபிடித்து அதிலிருந்து ஒதுங்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தங்கம், ரியல் எஸ்டே என்பதை மட்டுமே நாடக்கூடியவர்களாக அவர்கள் இல்லை.
இந்த பாசிட்டிவ்-ஆன வளர்ச்சியைப் பார்க்கும்போது, அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் பலர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை!