பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தல்

பாராளுமன்றத்தில் நடைபெறப்போவது என்னசரியாகத் தெரிந்துகொள்ள

 

இந்நாட்டின் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பில் இதற்கு முன்னர் ஒருமுறை அனுபவம் இருக்கின்றபோதும் இம்முறை இது விசேடமாகக் காணப்படுகிறது. இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மறைந்ததைத் தொடர்ந்து அப்போதைய பதில் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க, பிரேமதாசவின் எஞ்சிய காலத்துக்காக வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் இம்முறை வேட்பாளர்கள் சிலர் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருப்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியிருக்கும். அப்படியாயின் அது எமது நாட்டின் வரலாற்றில் புதிய அனுபவமாக இருக்கும்.

பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாயின் பாராளுமன்றத்தின் மூலம் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் நடைமுறை அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கமைய இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்களும் குறித்த சட்டத்தில் படிப்படியாக வழங்கப்பட்டுள்ளன.

19ஆம் திகதி நடைபெறுவது என்ன?

  • ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகியுள்ளது என அறிவிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்கு (இரண்டு தினங்கள்) முற்படாததும், ஏழு நாட்களுக்குப் பிற்படாததுமான தினமொன்றை பாராளுமன்ற செயலாளர் நாயகம் வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பதற்கான தினமாகவும் அதற்கான நேரத்தையும் தீர்மானிக்க வேண்டும்.
  • இதற்கமைய, 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடி வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என செயலாளர் நாயகம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை அறிவித்தார்.
  • இந்த அறிவிப்புக்கு அமைய வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதிப் பதவிக்காக வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்வது மாத்திரமே 19ஆம் திகதி இடம்பெறும்.
  • வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை முன்னெடுக்கும் அதிகாரியாக அல்லது தெரிவத்தாட்சி அலுவலராக பாராளுமன்ற செயலாளர் நாயகமே செயற்படுவார்.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அந்தப் பதவியில் செயற்படுவதற்கு விருப்பம் என்பதை எழுத்து மூலம் முன்னரே தெரிவிப்பது அவசியம்

  • வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்வுசெய்வதற்காக முன்மொழிய எதிர்பார்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் தம்மால் முன்மொழியப்படும் உறுப்பினர் ஜனாதிபதிப் பதவிக்கு சேவையாற்றத் தெரிவுசெய்யப்பட்டால் அதற்குத் தான் தயார் என்பதை எழுத்துமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட எழுத்துமூல விருப்பம் வேட்புமனுப் பெற்றுக்கொள்ளும் 19ஆம் திகதி செயலாளர் நாயகத்திடம் கையளிக்க வேண்டும்.
  • வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியும்போது அரசியலமைப்பின் 92வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியிழப்புகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
  • இதற்கமைய அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செயலாளர் நாயகத்தை விளித்து அன்றையதினம் பாராளுமன்றத்துக்கு வருகைதந்துள்ள மற்றுமொரு உறுப்பினரின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியலாம். அவ்வாறு முன்மொழியப்பட்ட உறுப்பினர் அன்றையதினம் பாராளுமன்றத்திற்கு சமுகமளித்திருக்க வேண்டும். அதன் பின்னர் இப்பெயரை மற்றுமொரு உறுப்பினர் வழிமொழிய வேண்டும். இது குறித்து விவாதம் நடத்த முடியாது.

ஒரு உறுப்பினரின் பெயர் மாத்திரம் முன்மொழியப்பட்டால்?

ஒரு உறுப்பினரின் பெயர் மாத்திரம் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருந்தால் குறித்த உறுப்பினர் வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதிப் பதவிக்குப் பாராளுமன்றத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதை அன்றையதினமே பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பார். இவ்வாறான சூழ்நிலையில் இந்த நடைமுறை விரைவில் முடிவுக்கு வரும் (1993ஆம் ஆண்டு டி.பி விஜேதுங்க இவ்வாறே தெரிவுசெய்யப்பட்டார்)

20 ஆம் திகதி நடைபெறுவது என்ன?

  • ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டால், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு நாட்கள் பிந்தாத ஒரு தினத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
  • அதற்கமைய, 19 ஆம் திகதி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தால், 20 ஆம் திகதி ஜனாதிபதிக்கான வாக்கெடுப்புக்காக ஒதுக்கப்படும்.
  • இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராக செயற்படுவார்.

வாக்கெடுப்பு எவ்வாறு நடக்கும்?

 

  • வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் தெரிவத்தாட்சி அலுவலர் வெற்று வாக்குச்சீட்டுப் பெட்டியை அல்லது வெற்று வாக்குச்சீட்டுப் பெட்டிகளை உறுப்பினர்களுக்குக் காண்பித்துப் பின்னர் அதனை முத்திரையிடுவார்.
  • இந்த வாக்களிப்பில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை காணப்படுவது விசேட அம்சமாகவும்.
  • அதற்கமைய வாக்களிப்புத் தொடங்கும்போது தெரிவத்தாட்சி அலுவலராக செயற்படும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் வாக்குச்சீட்டைப் பெறுவதற்காக சபாநாயகர் உட்பட ஒவ்வொரு உறுப்பினரினதும் பெயரை அழைப்பார். பெயர் அழைக்கப்படும் போது உரிய உறுப்பினர் தெரிவத்தாட்சி அலுவலரின் மேசைக்கு அருகில் சென்று வாக்குச் சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்போது தெரிவத்தாட்சி அலவலர் உறுப்பினர் முன்னிலையில் வாக்குச்சீட்டின் பின்புறத்தில் தனது முதல் எழுத்துக்களைக் கொண்ட கையொப்பத்தை இடுவார்.
  • அதனை அடுத்து, வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்ட உறுப்பினர் ஏற்பாடு செய்யப்பட்ட கூண்டிற்குச் சென்று வாக்கைப் பதிவு செய்து தெரிவத்தாட்சி அலுவலரின் கையொப்பம் தெரியும் வகையில் மடித்து தெரிவத்தாட்சி அலுவலரின் மேசையின் மீதுள்ள பெட்டியில் இட வேண்டும்.

எவ்வாறு வாக்குச்சீட்டை பதிவு செய்வது?

 

  • ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு வீதம் கிடைக்கப்பெறுவதுடன், வேட்பாளரின் பெயருக்கு எதிரேயுள்ள கட்டத்தில் ‘1’ எனும் இலக்கத்தை இடுவதன் மூலம் வாகைப் பதிவுசெய்ய வேண்டும். பல வேட்பாளர்கள் காணப்படும் போது விருப்பு வாக்குகளை வழங்குவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. அதன்படி, வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய, ஏனைய வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிரேயுள்ள கட்டங்களில் 2,3, எனும் வகையில் விருப்பு வாக்குகளை பதிவுசெய்ய முடியும்.

வேட்பாளரின் பெயர்

விருப்புரிமை ஒழுங்கு

1 (வேட்பாளரின் பெயர்)

 

2 (வேட்பாளரின் பெயர்)

 

3 (வேட்பாளரின் பெயர்)

 

4 (வேட்பாளரின் பெயர்)

 
  • இதில், வாக்கைக் குறிப்பிடும்போது உறுப்பினர் ஒருவரினால் வாக்குச் சீட்டில் தவறு ஏற்பட்டிருந்தால் (வாக்குச்சீட்டு பழுதாக்கப்பட்டால் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) இதனை தெரிவத்தாட்சி அலுவலரிடம் மீண்டும் கையளிக்க முடியும் என்பதுடன், இது தொடர்பில் தெரிவத்தாட்சி அலுவலர் திருப்தியடையும் பட்சத்தில் வேறு வாக்குச் சீட்டை வழங்க முடியும். அத்துடன், பழுதடைந்த வாக்குச் சீட்டு தெரிவத்தாட்சி அதிகாரியினால் செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டும்.
  • பெயர் அழைக்கப்படும் போது வாக்கு அளிக்காத உறுப்பினர்களின் பெயர்கள் வாக்கெடுப்பு முடிவடைய முன்னர் இரண்டாவது தடவையாகவும் அழைக்கப்பட வேண்டும். அவ்வாறு அழைக்கப்படும்போதும் குறித்த உறுப்பினர்கள் வாக்களிக்காதிருந்தால், அவர்கள் வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டார்கள் எனக் கருதப்படுவர்.

வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிபெற்றவர் அறிவிக்கப்படுவது எவ்வாறு? வெற்றிபெற 113 வாக்குகள் பெற வேண்டுமா?

வாக்களிப்பு நிறைவடைந்ததும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணப்படும் இடத்துக்கு யாராவது வேட்பாளர் செல்வதற்கு விரும்பினால் இதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். இல்லாவிட்டால் அவருடைய பிரதிநிதியாக பிறிதொரு உறுப்பினரை இதற்காக நியமிப்பதற்கான சந்தர்ப்பமும் வேட்பாளருக்கு உள்ளது.

  • அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கையில் அரைவாசிக்கு மேலான வாக்குகள் யாராவது ஒரு வேட்பாளருக்குக் கிடைக்குமாயின் குறித்த வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவத்தாட்சி அலுவலர் அதாவது பாராளுமன்ற செயலாளர் நாயகம் உடனடியாக அறிவிப்பார்.
  • அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேலான வாக்குகள் எந்தவொரு வேட்பாளருக்கும் வழங்கப்படாத சந்தர்ப்பத்தில் இந்த நடைமுறை சற்று நீளமானதாக இருக்கும். அதன்போது குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார். அவ்வாறு நீக்கப்படும் உறுப்பினருக்கு முதலாவது விருப்பைத் தெரிவித்த உறுப்பினர்களின் இரண்டாவது விருப்பத் தெரிவு உரிய வேட்பாளர்களின் வாக்குகளுடன் இணைக்கப்படும்.
  • அவ்வாறு செய்தும் எந்தவொரு வேட்பாளருக்கும் செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லையாயின் ஒவ்வொரு கணக்கெடுப்பின் போதும் குறைந்த விருப்பு வாக்குகளைப் பெற்ற உறுப்பினர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட விருப்பு வாக்குகள் இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களுடன் சேர்க்கப்படும்.
  • இவ்வாறு செய்தும் எந்தவொரு வேட்பாளரும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கும் அதிகமான எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவில்லையாயின் மேலே குறிப்பிடப்பட்டது போன்று வாக்கு எண்ணும்போது அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டார் என்பது தெரிவத்தாட்சி அலுவலரினால் சபைக்கு அறிவிக்கப்படும்.
  • மேலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு இடையே வாக்குகள் சமமாக இருந்தால், தெரிவத்தாட்சி அலுவலரின் தற்றுணிபின் பேரில் திருவுளச்சீட்டு போடப்படும்.
  • அத்துடன், ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் வேட்பாளரின் பெயரை செயலாளர் நாயகம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.