இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலக இயக்குநர்கள் பாலிவுட் படங்களையும் அவ்வப்போது இயக்குவது வழக்கம். அந்தவகையில் தற்போது அட்லி, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதேபோல் இயக்குநர் பா. ரஞ்சித், ஜார்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட ‘பிர்சா’ படத்தை இந்தாண்டு இறுதியில் இயக்க உள்ளார். இந்த வரிசையில் தற்போது லோகேஷ் கனகராஜூம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், கடந்த 2 வருடங்களாக சல்மான் கானை வைத்து இந்தியில் படம் இயக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த கூட்டணி அமையவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில், புதியப் படத்தை தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இதற்கான சந்திப்பும் ஹைதராபாத்தில் நடந்ததாக தெரிகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்கிலேயே சல்மான்கான் முதலில் நடிப்பதாக தகவல்கள் வந்தநிலையில் பின்னர் அது கைவிடப்பட்டது.
தற்போது லோகேஷின் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதால், இந்தக் கூட்டணி அமைந்து புதிய படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. நடிகர் விஜயின் ‘தளபதி 67’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.