லண்டன்: பிரிட்டன் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான மூன்றாம் கட்ட தேர்தல் சுற்றில், ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் தேர்வுக்கான போட்டியில் இன்னும் நான்கு பேர் மட்டுமே உள்ளதால் ரிஷிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்த கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் மற்றும் இரண்டாவது சுற்றில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் வென்றிருந்த நிலையில், மூன்றாம் கட்ட சுற்றிலும் அவர் வென்றிருக்கிறார். மூன்றாம் சுற்றில் ரிஷிக்கு 115 வாக்குகள் கிடைத்தன. அவரைத் தொடர்ந்து வர்த்த அமைச்சர் பென்னி மோர்டண்ட் 82 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். வெளியுறவு செயலாலர் லிஸ் ட்ரஸ் 71 வாக்குகள் பெற்றும் மூன்றாம் இடம் பிடித்தார். முன்னாள் சமத்துவத் துறை அமைச்சர் கெமி 58 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் தற்போது நான்கு பேர் மட்டும் இருப்பதால் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வரும் ரிஷிக்கு பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
யார் இந்த ரிஷி? – இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி, அரசியல் ஆர்வம் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சில ஆண்டுகள் தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ரிஷிக்கு, 2014-ல் வடக்கு யார்க்ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையான ரிச்மாண்டு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி உள்ளார். இவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகனும் ஆவார்.