லண்டன்:பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சி தலைவர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கூடுதலாக, 14 ஓட்டுகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பழமைவாத கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான மூன்றாம் கட்ட தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. ஆளும் கட்சி தலைவராக தேர்வானால் மட்டுமே பிரதமராக முடியும்.இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், கூடுதலாக, 14 ஓட்டுகள் பெற்று, 115 ஓட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
வர்த்தக அமைச்சர் பென்னி முர்டான்ட் 82 ஓட்டுகளும், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் 71 ஓட்டுகளும், முன்னாள் அமைச்சர் கெமி படேநாச் 58 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். ஓட்டுகள் குறைவாக பெற்றதால், நான்கு பேர் வெளியேறி விட்டனர்.
120 ஓட்டுகள் பெறுபவரே கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் பொறுப்பேற்க முடியும். நாளை நடக்கும் போட்டியில், இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவது யார் என்பது தெரியவரும். இதற்கிடையே ரிஷி சுனக், லிஸ் டிரஸ் இருவரும், நேற்று நடக்கவிருந்த ‘டிவி’ விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். வரி சீர்திருத்தம் தொடர்பாக, இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement