ஒரு பெண் குழந்தை பிறந்து, பருவம் அடைவதற்கு முன்னும் பின்னும் பெண்ணுறுப்பைப் பராமரிப்பது அவசியம். இது குறித்து நமக்கு பொதுவாக இருக்கும் பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
”பத்து வயதில் இருந்தே பெண்களுக்கு, பருவம் அடைவதற்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும். இதனால் மார்பக வளர்ச்சியும் அந்தரங்க பகுதிகளில் முடி வளர்ச்சியும் ஆரம்பிக்கும்.
இவை ஒரு பெண் பருவம் அடையப் போவதற்கான அறிகுறிகள். இந்தக் காலகட்டத்தில் பிறப்புறுப்பில் தொற்றுநோய்கள் வர வாய்ப்புள்ளது. பருவம் அடைவதற்கு முன்புவரை பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள சருமப் பகுதி மென்மையாக இருக்கும். அதில் நற்பயன் அளிக்கும் நுண்ணுயிர்களும் இருக்கும்.
நீச்சல் குளங்கள் மற்றும் குளிக்கும் தொட்டிகளில் அதிக நேரம் இருப்பதால் வேதிப்பொருள்களின் பாதிப்பால் பிறப்புறுப்பில் சில குழந்தைகளுக்கு எரிச்சல் ஏற்படும். உள்ளாடையை சுத்தமாகப் பராமரிக்காததால்கூட எரிச்சலும் அரிப்பும் வரலாம். இதனை வெஜைனைட்டிஸ் (Vaginitis) என்பர்.
பொதுக் கழிப்பறையில் உள்ள டாய்லட் பேப்பர்களை பயன்படுத்துவதால்கூட இந்தப் பிரச்னை வரலாம். பெண் குழந்தைகள், அடிக்கடி அந்தரங்கப் பகுதியில் கைவைத்துச் சொரிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்.
கழிவறையைப் பயன்படுத்திவிட்டு சுத்தம் செய்யும்போது முன்புறத்தில் இருந்து பின்புறமாகச் சுத்தம் செய்ய வேண்டும். பின்புறத்தில் இருந்து முன்புறமாகச் சுத்தம் செய்வதால் ஆசனவாய்ப் பகுதியில் இருக்கும் கிருமிகள் பிறப்புறுப்பை வந்தடைந்து வெஜைனைட்டிஸ் ஏற்படலாம். பருவம் அடைந்த பின்னும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.
மாதவிடாய் காலம்
மாதவிடாய் காலத்தில் சுத்தம் இன்றி இருப்பதால் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் தொற்று (Pelvic Inflammatory disease) ஏற்படும். இதைத் தவிர்க்க சில வழிகள் உண்டு. மாதவிடாய் காலத்தில் காட்டன் நாப்கின் பயன்படுத்துவது நல்லது. குறைந்தபட்சம் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கின் அளவைப் பொறுத்து 3 மணி நேரத்துக்கு ஒருமுறைகூட மாற்றலாம்.
இறுக்கமான ஆடைகளான லெக்கின்ஸ், ஜீன்ஸ் போன்றவற்றை அணியக்கூடாது. இறுக்கமான ஆடைகளை அணியும்போது பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படலாம். அந்தத் தொற்று கர்ப்பப்பைக்கு உள்ளே செல்ல வாய்ப்புகள் உண்டு. கருமுட்டைக் குழாய்க்குள் (Fallopian Tube) இவை சென்றால் கருத்தரிப்பதில்கூட பிரச்னை ஏற்படும்.
கர்ப்ப காலம்
சர்க்கரை நோய் இருக்கும் கர்ப்பிணிகள் அல்லது கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சிறுநீரகத் தொற்று ஏற்படலாம்.
எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவர்கள், சிறுநீர்ப் பரிசோதனைக்குப் பரிந்துரைப்பார்கள். அதனைத் தவறாமல் செய்ய வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுகள் கவனிக்கப்படாமலும் சிகிச்சை அளிக்கப்படாமலும் இருந்தால் குறித்த நாளுக்கு முன்னதாகவே குழந்தை பிறந்துவிட வாய்ப்புகள் உண்டு.
கர்ப்ப காலத்தில் பூஞ்சைத் தொற்றும் ஏற்பட வாய்ப்புண்டு. அப்போது தயிர் போன்று வெள்ளைப்படுதல் ஏற்படும். கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து இருப்பதே தொற்றுகளுக்கு காரணம். அம்மைத் தொற்று ஏற்பட்ட இடங்களுக்குச் செல்வதையும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
மெனோபாஸ்
50 வயது என்பது பெண்களுக்கு மாதவிடாய் முற்றுப் பெறுவதற்கான காலம். இந்த வயதை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் ஹார்மோன்களின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் பிறப்புறுப்புப் பகுதியில் எரிச்சல் ஏற்படத் தொடங்கும். அதற்கு அட்ரோபிக் வெஜைனைட்டிஸ் (Atrophic Vaginitis) என்று பெயர். இந்தப் பிரச்னைக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் ஈஸ்ட்ரோஜென் திரவங்களைப் பயன்படுத்தினால் எரிச்சல் குறையும்.
சிறுநீரகக் கோளாறுகள், குறிப்பாக சிறுநீர் கழிக்கத் தொடங்கும்போது ஏற்படும் வலி… யூரித்ரைட்டிஸ் (Urethritis), சிறுநீர் கழித்த பிறகு ஏற்படும் வலி… சிஸ்டைட்டிஸ் (Cystitis) ஆகிய இரண்டு பிரச்னைகள் இந்தச் சமயத்தில் வரலாம். இவை இரண்டுமே உடலில் நீர்சத்துக் குறைபாட்டால் ஏற்படுபவை.
தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 3 முதல் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு கர்ப்பப்பை இறங்கி இருக்க வாய்ப்பு உண்டு. பிரச்னையைக் கண்டறிந்தவுடன் மருத்துவரிடம் சிகிச்சை பெறுதல் வேண்டும். பெண்களுக்கு அந்தரங்கப் பகுதிகளில் தொற்றோ, பிரச்னையோ ஏற்பட்டால் மருத்துவரை அணுகாமல், சுயமாக மருந்துகள் எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என்றார்.
– சொர்ணமீனா ராமநாதன்