புதுடில்லி : புதுடில்லியில், தன் மனைவி குறித்து அவதூறாக பேசிய சக ஊழியர்கள் மூவரை போலீஸ் ஒருவர், நேற்று சுட்டுக் கொன்றார். புதுடில்லியின் ஹைதர்பூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிபவர் பிரபின் ராய். வடகிழக்கு மாநிலமான சிக்கிமைச் சேர்ந்த இவருடன், அதே மாநிலத்தைச் சேர்ந்த நம்கியால் பூட்டியா, இந்திரலால் சேத்ரி, தன்ஹாங் சுப்பா ஆகிய மூன்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பிரபின் ராய்க்கும், மற்ற மூவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆத்திரமடைந்த பிரபின், அவர்கள் மூவரையும் சுட்டுக் கொன்றார். இது குறித்து, போலீஸ் துணை ஆணையர் பிரணவ் தயல் கூறியதாவது:துப்பாக்கிச் சூடு நடந்த இடத்துக்குச் சென்றபோது, இரண்டு போலீசார் உயிரிழந்தது தெரிய வந்தது. பலத்த காயமடைந்த இன்னொரு போலீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவத்துக்குப் பின் பிரபின், அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில், தன் மனைவி குறித்து மூவரும் அவதுாறாகப் பேசியதாகவும், அதனால் மன உளைச்சலில், அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement