மாணவியின் உடலுக்கு மறுகூறாய்வு.. பள்ளியில் சிபிசிஐடி, தடயவியல்துறை ஆய்வு..!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசார், மருத்துவக்குழுவினர் ஆகியோர் ஒரே நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாணவியின் உடலுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு உடல் கூறாய்வு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தங்கள் தரப்பு மருத்துவரையும் குழுவில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் இன்று மறு உடற்கூறாய்வு செய்ய இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்றும் மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில், அந்த கோரிக்கையை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு ஏற்க மறுத்தது.

இந்நிலையில், பெற்றோர் எங்கு இருகிறார்கள் என தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், பெற்றோர் இல்லாமல் மறு உடற் கூறாய்வு செய்யவும், அவர்கள் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், கடலூர் மாவட்டம் வேப்பூர் துணை வட்டாட்சியர்கள் மாணவியின் வீட்டில் மறு உடற்கூறாய்வு நடத்துவதற்கான நோட்டீசை ஒட்டியதுடன், அவரது உறவினரிடமும் அதனை அளித்துச் சென்றனர்.

காலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே அறையில் மாணவியின் உடலில் எத்தனை இடங்களில் காயங்கள் இருந்தது? போன்றவற்றை நீதிமன்றம் நியமித்த மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு சென்றனர். அங்கு, மாணவி மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாக சொல்லப்படும் இடத்தில் ஆய்வு செய்த அவர்கள், அந்த இடத்தின் உயரம், மாணவி எவ்வாறு விழுந்து கிடந்தார்? ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும், மாணவியின் உடலில் உள்ள காயங்களுக்கும், உயரமாக இடத்தில் இருந்து குதித்தால் உடலில் ஏற்படும் காயங்களுக்கும் ஒத்துப்போகிறதா? என பல்வேறு கோணங்களில், தடயவியல் துறை நிபுணர் சாந்தக் குமாரி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு முதலில் உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஜியா உல் ஹக் தலைமையிலான விசாரணை குழுவினர், கலவரம் நடந்த பள்ளியில் சேதமடைந்த வகுப்பறைகள், தீக்கிரையாக்கப்பட்ட பேருந்துகள் போன்றவற்றை பார்வையிட்டனர்.

மேலும், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி விழுந்த இடத்தில், பெண் பொம்மையை கீழே வீசி விசாரணை மேற்கொண்டனர். துணிக்கடையில் காட்சிக்கு வைத்திருக்கும் பொம்மையை கொண்டு வந்து மாணவியின் எடைக்கு ஏற்ப தயார் செய்து ஆய்வு நடத்தப்பட்டது.

மாணவி மேல்தளத்தில் இருந்து விழுந்திருக்கலாமா? என்ற சந்தேகத்தில் மொட்டை மாடியில் இருந்தும் பொம்மையை வீசி ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்த விசாரணை நடைமுறையை போலீசார் வீடியோப் பதிவு செய்தனர்.

பிற்பகல் 3 மணி அளவில், பெற்றோர் தரப்பில் யாரும் இல்லாமல், கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு அரசு மருத்துவமனையில் மறுகூறாய்வு நடைபெற்றது. விழுப்புரம், திருச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் கீதாஞ்சலி, ஜுலியானா ஜெயந்தி, கோகுலநாதன் தலைமையில் மறுகூறாய்வு நடந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.