கள்ளக்குறிச்சி 12 ஆம் வகுப்பு மாணவி மரண வழக்கில் போராட்டம் கலவரமாக மாறியதன் எதிரொலியாக அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாணவியின் உடல் மறுகூராய்வு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி. மாற்றம்:
மாணவி மரணம், கலவரம் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பகலவன் நியமனம் செய்யப்படுவதாகவும் உள்துறை செயலர் அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மாற்றம்:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரும் மாற்றப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மரணம் அடைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் எதிரொலியால் இந்த பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமனம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM