கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி மரணம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சேலம் டி.ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் விடுதயில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியில் அதிகாலை நேரத்தில் மரணமடைந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவியில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் இறந்த மாணவிக்கு ஆதரவாக அவரின் குடும்பத்துடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் தாக்கப்பட்டனர்.
மேலும் அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறை வெடித்தது. திடீரென மாணவி படித்த தனியார் பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் சுறையாடினர். மேலும் டேபிள் சேர் உள்ளிட்ட பொருட்களையும் பள்ளி வளாகத்தில் நின்றிருந்த பள்ளிக்கு சொந்தமான பேருந்துகளையும் தீவைத்து எரித்தனர்
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதியில் வரும் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது சூழல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனைக்கு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டதாக 100-க்கு மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில். பலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் மருத்துவமனையில் தங்களது விசாணையை தொடங்கியுள்ளனர்
இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளியில் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த சேலம் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் டி.ஐ.ஜி. பிரவின் குமார் அபிநவ் உட்பட பேர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“