சிறுக சிறுக சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கும், பூஜ்ய அபாயம் கொண்ட திட்டங்களில் முதலீடு செய்யும் நபர்களுக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகுந்த பலனைக் கொடுக்கும்.
அஞ்சல் அலுவலகங்களில் பல்வேறு முதலீடு திட்டங்கள் இருந்தாலும் மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. இதில் தேசிய சேமிப்பு மாதாந்திர பராமரிப்பு திட்டம் மிக முக்கியமான திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் மத்திய அரசு 6.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இது மற்ற வங்கிகளில் உள்ள நிலையான வைப்புநிதி (ஃபிக்சட் டெபாசிட்) திட்டங்களில் வழங்கப்படும் வட்டியை காட்டிலும் அதிகமாகும்.
மேலும் இந்தத் திட்டம் தொடக்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டுக்கு நிலையான உத்தரவாதம் அளிக்கிறது. இதன் பொருள், முதலீட்டாளர்கள் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும் அதைப் பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை.
அஞ்சலக குறைந்தப்பட்ச வைப்புத் தொகை: இந்தத் திட்டத்தில் இணைய குறைந்தப்பட்ச தொகை ரூ.1,000 ஆகும். அதன்பின்னர் வைப்புத் தொகை ஆயிரம் மடங்குகளில் இருக்க வேண்டும். இந்தத் திருத்தம் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வந்தது.
ஒரு கணக்கிற்கு அதிகப்பட்ச முதலீடு ரூ.4.5 லட்சம் ஆகும். கூட்டுக்கணக்குக்கு ரூ.9 லட்சமாக இருக்கும். அந்த வகையில், ஒரு தனிநபரின் அதிகப்பட்ச வைப்புத் தொகை ரூ.4.5 லட்சம் ஆகும். கூட்டுக் கணக்கில் ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் சமமான பங்கு எடுத்துக் கொள்ளலாம்.
இந்தக் கணக்கை குழந்தைகள் தொடக்கலாமா?
அஞ்சலகத்தில் இதில் முதலீடு செய்ய விரும்பும் நபர் இளஞ்சிறார் ஆகவோ அல்லது குழந்தையாகவோ இருந்தால் பாதுகாவலர் ஒருவரால் இந்தக் கணக்கை தொடங்க முடியும்.
அதேநேரத்தில் 10 வயதை கடந்தால் தனி கணக்காக தொடங்கலாம். இதில் வரும் வட்டியை பெற்றோர் தங்களின் கல்விச் செலவு உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தலாம்.
மாதாந்திர வட்டி கணக்கீடு
நீங்கள் ஒரு கணக்கை தொடங்கி அந்தக் கணக்கில் ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால் வருடாந்திர வட்டி வீதத்தில் மாதந்தோறும் ரூ.1,100 கிடைக்கும். அதேநேரம் குழந்தை பெயரில் ரூ.3.50 லட்சத்தை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் ரூ.1925 வட்டியாக கிடைக்கும்.
உச்ச வரம்பான ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்தால் மாதந்தோறும் ரூ.2475 வட்டியாக கிடைக்கும். இந்த வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் கணக்கை 5 ஆண்டுக்கு பின்னர் பாஸ்புக்கை சமர்பித்து மூடலாம்.