மாலத்தீவில் இருந்து சென்ற கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு

சிங்கப்பூர்,

சொந்த நாட்டில் எதிர்ப்பு உச்சமடைந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பியோடினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூரை கடந்த வியாழக்கிழமை சென்றடைந்தார். அங்கிருந்தபடியே வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேயை அனுமதித்ததற்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு நெருப்பு கொழுந்துவிடத் தொடங்கியுள்ளது.

அவரது வருகைக்கு எதிராக ஓர் ஆன்லைன் மனுவை உருவாக்கியுள்ள தொழிலதிபர் ரேமண்ட், கோத்தபய மீது சிங்கப்பூர் போலீசில் பணமோசடி புகாரும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். அவரது ஆன்லைன் மனுவுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோத்தபயவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபு ராமச்சந்திரன் என்பவரின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள பூங்கா ஒன்றில் கடந்த சனிக்கிழமை அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கோத்தபயவை அனுமதித்த சிங்கப்பூரின் முடிவை இலங்கையர்கள் பலரும் எதிர்த்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோத்தபய வருகைக்கு எதிராக, சட்டத்தை மீறி யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று சிங்கப்பூர் போலீஸ் எச்சரித்துள்ளது. அதேவேளையில், தனது தனிப்பட்ட பயணத்தை விரைவாக முடித்துக்கொண்டு கிளம்புமாறு கோத்தபயவை சிங்கப்பூர் அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.