மின்கட்டணம் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்: சசிகலா

சென்னை: ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவு எடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த மக்கள் விரோத அறிவிப்பு, தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய நடுத்தர சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கின்ற வகையில் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு பேரிடியை தமிழக மக்களின் தலையில் இறக்கியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

திமுகவினர் தனது தேர்தல் அறிக்கையில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்று அறிவித்துவிட்டு, தமிழக மக்களை நம்ப வைத்து ஏமாற்றி ஆட்சியில் வந்து அமர்ந்து கொண்டு தற்போது ஒட்டு போட்ட மக்களுக்கு, மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் திமுகவினர், தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சினையால் அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்படும் நிலையில், திமுகவினர் அதை சரிசெய்வதை விட்டுவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்துவது தமிழக மக்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கும். மின்சாரத்துறை அமைச்சரோ அண்டை மாநிலங்களில் மின் கட்டணம் நம்மைவிட அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிடுவது மிகவும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

இவர் தமிழகத்திற்குதானே அமைச்சராக இருக்கிறார். நாமெல்லாம் தமிழகத்தில் வாழ்கின்றபோது, எதற்காக மற்ற மாநிலங்களை ஒப்பிட வேண்டும் என்று தெரியவில்லை? அவ்வாறு மற்ற மாநிலங்களை ஓப்பிடுவதாக இருந்தால் நம்மிடம் உள்ள அடிப்படை கட்டமைப்புகள், கிடைக்கும் வருவாய் முதலான அனைத்து அம்சங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் இல்லாத புதிய வழிமுறைகளை கையாண்டு நமது மாநிலம் கூடுதலாக வருவாய் பெற்று வருகிறது. அதுபோன்று, மற்ற மாநிலங்களும் ஈட்டுகின்றனவா? என்பதையும் மின்சாரத்துறை அமைச்சர் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே, நெசவாளர்கள் நூல் மற்றும் பஞ்சு விலை ஏற்றதால் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்கள்.

அவர்களுக்கும் மின்கட்டணத்தை உயர்த்துவது மிகவும் வேதனையை அளிக்கிறது. தமிழகத்தில் ஏற்கெனவே விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கரோனா போன்ற பிரச்னைகளாலும் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வழியில்லாமல் தவிக்கின்ற நிலையில், ஏழை, எளிய, சாமானிய நடுத்தர மக்களுக்கு, திமுக அரசு தன் பங்குக்கு மின்சார கட்டணத்தையும் உயர்த்துவது மன்னிக்க முடியாதது, இதைத்தான் திராவிட மாடலாக கருதுகிறார்களா? என்றும் தெரியவில்லை .

எனவே, தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.” என்று சசிகலா கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.