சென்னை: “மத்திய அரசு மீது பழிபோடுவதை ஏற்க முடியாது” என்று தமிழக மின் கட்டண உயர்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சீரான மின்சாரத்தை வழங்குவதற்கு வக்கில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் தங்கு தடையற்ற சீரான மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டிலிருந்து மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. 2016-ல் கட்டணத்தை ஏற்றவில்லை என்றாலும்கூட சலுகைகளும் கொடுக்கப்பட்டது. அதாவது 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இலவசம். விலையில்லா மின்சாரத்தை நாங்கள் வழங்கினோம். எங்களால் மட்டும் எப்படி சாத்தியமானது. மின்சார வாரியத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்ல நிர்வாகத்தின் கீழ் நடத்தியதால்தான் அது சாத்தியமானது.
மத்திய அரசு மீது பழிபோடுவதை ஏற்க முடியாது. 2014-ல், மின்சார கட்டணத்தை உயர்த்தாவிட்டால், மானியத்தை நிறுத்திவிடுவோம் என்று மத்திய அரசு எங்களுக்கு கடிதம் எழுதியது. நாங்கள் பயப்படவில்லை. நீங்கள் மானியத்தை நிறுத்தினாலும், மக்கள் தலையில் அந்த சுமையை ஏற்றமாட்டோம் என்றுகூறி, சீரான மின்சாரத்தை மக்களுக்கு சுமையில்லாத வகையில், மின் கட்டணத்தை உயர்த்தாமல் மின்விநியோகம் நடந்ததா? இல்லையா?
ஆனால், மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மானியத்தை நிறுத்திவிடுவதாக மத்திய அரசு கூறியதாக தமிழக அரசு கூறுகிறது. அதே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. அதற்கு இணையாக ஏன் விலையை குறைக்கவில்லை. இதனால், ஏழை எளிய நடுத்தர மக்கள் உள்பட அனைவருமே இந்த கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியைப் பொறுத்தவரை அனைவரது நலனும் பாதிக்காத வகையில்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகிறது. அதில் யாருக்கும் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. கட்சியில் இருக்கும் அனைவரின் நலன்களையும் பாதுகாப்பதற்காகவே துணைத் தலைவர், துணை செயலாளர் ஆகியோர் தற்போது இந்த பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் விமர்சனத்துக்கு இல்லாதவை” என்று அவர் கூறினார்.