மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்! விஜயகாந்த்

சென்னை: சாமானிய மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தேமுதிக தலைவர்  விஜயகாந்த் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகஅரசு நேற்று இரவு மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மின்கட்டண உயர்வு குறித்தும் அறிவிக்கப்பட்டு இருப்பது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகஅரசின் இந்த நடவடிக்கைக்கு, திமுகவின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், சாமானிய மக்களை பாதிக்கும்  மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து தமிழகஅரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் என்று விஜயகாந்த்  வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருக்கிறார். தமிழகத்தை விட அண்டை மாநிலங்களில் மின் கட்டண உயர்வு அதிகமாக உள்ளதாக அவ்வப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வருகிறார். அண்டை மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு பேசுவதற்கு பதிலாக, வாக்களித்த தமிழக மக்களுக்கு இந்த அரசு சிறந்த அரசாக இருக்க வேண்டும். பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக, தற்போது விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்ற அரசாக மக்களை வாட்டி வதைக்கிறது. ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலையில், தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவது என்பது அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதாகும். நகர்ப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் என்பது சாதாரணம். இது மட்டுமல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் மின்சார கட்டணத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.

மேலும் இந்த மின் கட்டணம் உயர்வு வீட்டு வாடகையை உயர்த்தவும் வழிவகுத்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல் – டீசல், சமையல் கியாஸ் விலை, சமையல் எண்ணெய் உள்பட உணவு தானியங்களின் விலை உயர்ந்து வருகிறது. மற்றொரு புறம் மின் கட்டணம் உயருகிறது. இதனால் சாமானிய மக்கள் மேலும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்களை பாதிக்கும் இந்த மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு, மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் சுமையை மக்கள் நலன் கருதி மறுபரிசீலனை செய்து தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.