மீண்டும் தவறு… பெரியார் பல்கலை தேர்வு வினாத்தாளில் தொடரும் சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதி எது என்ற கேள்வி வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், மீண்டும் ஒரு சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் பெயரை அண்ணாதுளை என்ற பிழையுடன் வினாத்தாள் வெளியாகியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பருவத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில், முதுநிலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி பெரிய சர்ச்சையை கிளப்பி, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது.
பல்கலைக்கழகத்தில் சாதி தொடர்பான கேள்வி கேட்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. தற்போது பி.ஏ அரசியல் பொருளாதார பாடத்திற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாட்டில் அண்ணாதுளை ஆட்சியின் சாதனை பற்றி விவாதிக்க என்ற பிழையுடன் வினாத்தாள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் “அண்ணாதுரை” என்ற பெயரை “அண்ணாதுளை” என்று பிழையாக அச்சிட்டு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.
Why did CN Annadurai, the founder of DMK, part ways with Periyar?
மேலும், தமிழ்நாட்டில் அதிமுகவின் தோற்றம், மற்றும் வரலாறு வளர்ச்சி பற்றி வரையறுக்க என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. பி.ஏ வரலாறு பாடத்தில் கேள்விக்குறி வினா பதில்களில் பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எவை என்பதற்கான பதிலில் 1822, 1824, 1823, 1825 என்ற தவறான விடைகள் இடம்பெற்றுள்ளது. இதற்கான சரியான பதில் 1828 ஆகஸ்ட் 20 என்பதாகும். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை பாடங்களுக்கான வினாத்தாளில் தவறான பதில்கள் பிழைகளுடன் வெளியாகி உள்ள நிலையில், வினாத்தாள் ஆய்வு குழுவின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
image
மேலும், பி.ஏ வரலாறு பாடத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியின் அரசியல் குருவான கோபால கிருஷ்ணகோகலே எந்த தலைவராக இருந்தார் என்ற கேள்விக்கு, தீவிரவாதிகள், மிதவாதிகள், பயங்கரவாதிகள், புரட்சிவாதிகள் என விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கேள்விக்கு அளித்துள்ள கொள்குறி வகை விடைகள் சுதந்திர போராட்ட தலைவரை தரம் தாழ்த்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக தரப்பில் கூறும்போது “பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட வல்லுநர்கள் குழு, பட்டியலில் உள்ள பிற பல்கலைக்கழகங்கள் இணைவு பெற்ற கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை அனுபவத்தின் அடிப்படையிலான குழு மூன்று வகை வினாத்தாள்களை தயாரித்து வழங்கும்.
வினாத்தாள் அச்சகத்திற்கு அனுப்பும் முன்பாக பாடத்திட்டத்திற்கு அப்பால் வினா கேட்கப்பட்டுள்ளதா, தவறு மற்றும் எழுத்துப்பிழை உள்ளதா என கேள்வித்தாள் ஆய்வுக்குழு தான் சரிபார்க்கப்படும். பின்னர் மூன்று வகை வினாத்தாளில் ஒரு வினாத்தாள் அச்சகத்திற்கு அனுப்பி, அச்சாகி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடக்கும் நிலையில், விடைத்தாள்களில் ஏராளமான பிழைகளும் தவறுகளும் சர்ச்சைக்குரிய வகையில் வினாக்களும் இடம்பெற்று வருவது, பெரியார் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரத்தை கேள்விக்குறியாகி உள்ளது என்றனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறும்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் தயாரிப்பு என்பது, துறை சார்ந்த பேராசிரியர்கள் வல்லுனர்கள் மூலம் நேரடியாக நடைபெறுகிறது. அதேபோல பெரியார் பல்கலைக்கழகத்தின் வினாத்தாள் தயாரிப்பு என்பது ஆய்வு மாணவர்களை வைத்து எடுப்பதை பேராசிரியர்கள் கைவிட வேண்டும். மேலும், வினாத்தாள் தயாரிக்கும் பேராசிரியர்களை பல்கலைக்கழக தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து வினாத்தாள் தயாரிக்க வேண்டும். அப்போது தவறு, பிழை நேர வாய்ப்பிருக்காது” என்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.