வன்முறை திட்டமிட்டதா? – சின்னசேலம் தனியார் பள்ளியில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடைந்த வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துணை இயக்குநர் சண்முகம் தலைமையில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சின்னசேலம் தனியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரிய அளவிலான வன்முறை ஏற்பட்டு, பள்ளி சூறையாடப்பட்டது. இது தொடர்பாக இதுவரை 300 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வன்முறை சம்பவம் திட்டமிட்டு நடைபெற்றதா அல்லது யதேயச்சாக நடைபெற்றதா என்பதை ஆராய விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துணை இயக்குநர் சண்முகம் தலைமையில் நிபுணர்கள் தனியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளி வளாகத்தில் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் என்ன மாதிரியான பொருட்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டனர், என்ன ஆயுதங்களை பயன்படுத்தினர், வெடிபொருட்களை கொண்டு வந்தனரா என ஆய்வு செய்தனர்.

மேலும், தீ வைப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்திய எரிபொருள், வன்முறையாளர்களின் நோக்கம் உள்ளிட்டவைக் குறித்தும் ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த மதுபாட்டில்கள், சுத்தியல், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியின் அடையாளத்துடன் கூடிய துண்டு மற்றும் தென் புரட்சியாளர்கள் என்ற போராட்ட பதாகை உள்ளிட்டவற்றையும் கண்டெடுத்துள்ளனர்.

அத்துடன், பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு, அவற்றின் ஹார்டி டிஸ்க் எடுத்துச் சென்றும், சிலவற்றை சேதப்படுத்தி வீசியும் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சண்முகத்திடம் கேட்டபோது, ”தடயங்களை சேகரித்து வருகிறோம். பள்ளி இனி செயல்படக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் வன்முறை நடைபெற்றிருப்பது போல் அறிய முடிகிறது. இருப்பினும் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே உறுதியாக தெரிவிக்க முடியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.