வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் `விடுதலை’ இரண்டு பாகங்களாக வெளிவரப்போகிறது எனத் தகவல் கிளம்பியிருக்கிறது.
‘அசுரன்’ படத்திற்குப் பின் வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கிவருகிறார். ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவாகி வருகிறது. மார்க்சிய – லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை என்கவுன்ட்டர் செய்வதற்காக இரு காவலர்கள் அழைத்துச்செல்கிறார்கள். அவர்களுக்கிடையில் நடைபெறும் உரையாடலே ‘துணைவன்’ சிறுகதை. இந்தச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘விடுதலை’யின் விறுவிறு திரைக்கதையை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், சேத்தன், பவானி ஶ்ரீ (ஜி.வி.பிரகாஷின் தங்கை), விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உட்படப் பலர் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்கிறார். கலை இயக்குநர் ஜாக்கிக்கு இது ஒரு சவாலான படம். முதற்கட்ட படப்பிடிப்புக்கு ஈரோடு அருகே உள்ள சத்தியமங்கலம் சென்றார்கள். அங்கே ஷூட்டிங் பர்மிஷன் சிக்கல் காரணமாக, அந்த காட்சிகளைத் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையிலும் சென்னையிலும் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இதுவரை படமாக்கப்பட்டதைக் கணக்கிடும் போது படத்தின் நீளம் கருதி, இரண்டு பாகங்களாக வெளிக்கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். படத்திற்குச் சவாலான காட்சிகள் அதிகம் உள்ளதால் நிர்ணயித்த காலத்தையும் தாண்டி படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் சேதுபதிக்கான போர்ஷன் முழுமையாக முடிந்துவிட்டது. இப்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் இரண்டு வாரங்களும், சிறுமலையில் இரண்டு வாரங்களும் படப்பிடிப்புகள் மீதமிருக்கின்றன.
இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் முழுமையாக முடிந்த பிறகு முதலில் படத்தைப் பல்வேறு நாடுகளின் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் ஐடியாவிலும் உள்ளனர். அதன்பிறகே தியேட்டர்களில் படம் வெளியாகும் எனவும் தகவல்.