தமிழகத்தில் மின் கட்டணம் விரைவில் உயரும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வந்த நிலையில் தற்போது நிஜமாகவே மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் விளக்கம் அளித்த போதிலும் மக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
3 மாதங்கள் வீட்டுக்கடன் மாதத்தவணை கட்டவில்லையா? இதெல்லாம் நடக்கும்!
இந்த நிலையில் தமிழகத்தில் மின்சார கட்டணம் எந்த அளவுக்கு உயர்ந்து உள்ளது? எவ்வளவு யூனிட் பயன்படுத்தினால் கூடுதலாக எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தற்போது விரிவாக பார்ப்போம்.
மின்கட்டணம் உயர்வு
தமிழகத்தில் மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இலவச மின்சாரம் தொடரும்
இதன்படி வீடு மற்றும் குடிசைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழக்கம் போல் தொடரும் என்றும் அதேபோல் விசைத்தறிகளுக்கான 750 யூனிட் மின்சாரம் அளிக்கும் திட்டம் தொடரும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
எவ்வளவு உயர்வு?
100 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 201 முதல் 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.72. 50 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 301 முதல் 400 வரை யூனிட் வரை மின்சாரம் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 401 முதல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.297.50 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். உதாரணத்திற்கு ஒருவர் 201 முதல் 300 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர் இதுவரை 150 ரூபாய் மின்கட்டணம் கட்டினார் என்றால் இனி கூடுதலாக ரூ.72.50 சேர்த்து ரூ.222.50 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்வுக்கு என்ன காரணம்?
மின் கட்டண உயர்வுக்கு மின் வாரியம் காரணம் தெரிவித்துள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளதாகவும் மூன்றில் இரண்டு பகுதி நிலக்கரியை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அழுத்தம்
மேலும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தான் குறைவு
இருப்பினும் இந்த உயர்வுக்கு பின்னரும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது என்று மின்சாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக 500 யூனிட் வரை தமிழகத்தில் மின்சாரத்தை பயன்படுத்துவோர் செலுத்தும் கட்டணம் ரூபாய் 1,725 என்றும் இதே கர்நாடகாவில் 500 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.3930 செலுத்துவார்கள் என்றும் கேரளாவில் ரூ.2765 செலுத்துவார்கள் என்றும் ஆந்திராவில் ரூ.2572 செலுத்துவார்கள் என்றும் மேற்கு வங்கத்தில் ரூ.3614 செலுத்துவார்கள் என்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.4448 செலுத்துவார்கள் என்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரூ.2772 செலுத்துவார்கள் என்றும் குஜராத் மாநிலத்தில் ரூ.2785 செலுத்துவார்கள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செலவு அதிகரிப்பு
மேலும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்களுக்கான செலவு 161.86 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஓய்வூதியர்களுக்கான செலவு 108.47 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மின்சாரத்தை விளக்கம் அளித்துள்ளது. அதேபோல் கடந்த ஆட்சியில் மின்சாரத்துறையில் வாங்கியுள்ள கடனுக்கு வட்டியாக மட்டும் 212. 85 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக கடந்த 10 ஆண்டுகளில் மின் பகிர்மான கழகத்தின் செலவு 175.58 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதுவே மின் கட்டணம் உயர்த்துவதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு இல்லையா?
மேலும் இந்த மின் கட்டண உயர்வால் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் 92.27 லட்சம் நுகர்வோர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.27.50 மட்டுமே அதிக கட்டணம் என்றும், அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தும் 36.25 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.72.50 ரூபாய் மட்டுமே அதிக கட்டணம் என்றும் அதேபோல் 500 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் 29.381 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.107 முதல் 120 வரை மட்டுமே அதிக கட்டணம் என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
Tamil Nadu government hikes power tariff, spares 1 crore consumers
Tamil Nadu government hikes power tariff, spares 1 crore consumers | ஷாக் அடிக்கும் மின்கட்டணம்… யார் யாருக்கு எவ்வளவு உயர்வு?