புதுடில்லி : இம்மாத இறுதியில் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்தை துவங்க திட்டமிட்டுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் சுறுசுறுப்பாகி உள்ளன.ஏலத்தை முன்னிட்டு, பாதுகாப்பு வைப்புத் தொகையாக 14 ஆயிரம் கோடி ரூபாயை, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் செலுத்தி உள்ளது.
இதேபோல், பிற நிறுவனங்களும் வைப்புத் தொகையை செலுத்தி உள்ளன.அண்மையில் தொலைதொடர்பு துறை, 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் இடம்பெற தகுதியான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது.அதன்படி, ஏலத்தில் கலந்து கொள்ளவிருக்கும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள், ஏலத்துக்கு முன் செலுத்தப்படும் பாதுகாப்பு வைப்புத் தொகையை செலுத்தி உள்ளன.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைதொடர்பு துறை அறிவித்திருக்கும் தொகையான, 14 ஆயிரம் கோடி ரூபாயை வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் மற்றொரு முக்கிய நிறுவனமான, ‘பார்தி ஏர்டெல்’ நிறுவன மும், 5,500 கோடி ரூபாயை செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அலைக்கற்றை ஏலத்தில் கலந்து கொள்ளும் மூன்றாவது பெரிய நிறுவனமாக கருதப்படும் ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், 2,200 கோடி ரூபாயை செலுத்தி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏலத்தில் பங்கேற்க கடைசியாக சேர்ந்த ‘அதானி டேட்டா நெட்வொர்க்ஸ்’ நிறுவனம் 100 கோடி ரூபாயை செலுத்தி உள்ளது.
இந்நிறுவனம், அதன் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான ‘பிரைவேட் நெட்வொர்க்’ வசதிக்காக 5ஜி ஏலத்தில் கலந்துகொள்கிறது.ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கும் இந்த நிறுவனங்கள் அனைத்துமே, விண்ணப்பக் கட்டணமாக தலா 1 லட்சம் ரூபாயை செலுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.வரும் 26ம் தேதி அன்று, 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement