கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவருடைய உடலை வாங்க மறுத்த பெற்றோர், மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மாணவியின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும், அந்த தருணத்தில் மாணவியின் தந்தை மற்றும் அவரது வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில், தங்களின் விருப்பப்படி மருத்துவக் குழுவினரை நியமிக்க வேண்டும் என்று கோரப்பட்டு மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இதையடுத்து, மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பில், தங்கள் விருப்பப்படி மருத்துவ குழுவினரை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என காவல் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.