உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லுலு மாலில் வழிபாடு நடத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யூசுப் அலி, பிரபல தொழிலதிபர். இவர், லுலு குழுமத்தின் தலைவர் ஆவார். இந்தக் குழுமம், லுலு என்ற பெயரில் வணிக வளாகத்தை உலகின் பல நகரங்களில் அமைத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், இந்தக் குழுமத்தின் வணிக வளாகம் இருக்கிறது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் செயல்பட்டு வரும் லுலு வணிக வளாகத்தில், கடந்த 12 ஆம் தேதி, சிலர் தொழுகையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பொது மக்கள் வந்து செல்லும் இடத்தில் இவ்வாறு வழிபாடு நடத்தியது தவறு என, பலர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 15 ஆம் தேதி, ஹிந்து மதத்தைச் சேர்ந்த 3 பேர் வழிபாடு நடத்தி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதை அடுத்து, வணிக வளாகத்தில் மதப் பிரார்த்தனைக்கு இடமில்லை என, லுலு குழுமம் அறிவிப்பு பலகை வைத்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யபாத் கூறியதாவது:
லக்னோ மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற தொல்லைகளை உருவாக்க முயற்சிக்கும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.