அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவ வீரர் தேர்வுக்கு சாதி, மதம் கேட்கப்படுகிறது: ஆம் ஆத்மி எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி:  அக்னி பாதை திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படும்போது சாதி கேட்கப்படுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார். அக்னிபாதை திட்டத்தின் கீழ் குறுகிய கால சேவையாற்ற ராணுவத்துக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் நடைமுறையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் வீரர் தேர்வு செய்யப்படும்போது சாதி பார்க்கப்படுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் புகார் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எம்பி சஞ்சய் தனது டிவிட்டர் பதிவில், ‘இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ராணுவ வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் என்ன சாதி, எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை ராணுவத்தில் பணியாற்ற தகுதிவாய்ந்தவர்களாக பிரதமர் மோடி கருதவில்லையா? பிரதமர் மோடி அக்னிவீரர்களை தேர்வு செய்கிறாரா? சாதி வீரர்களை தேர்வு செய்கிறாரா?’ என கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘இது ஒரு வதந்தி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சுதந்திரம் பெறுவதற்கு முன் இருந்த ஆட்சேர்ப்பு நடைமுறையே தொடர்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார். இதேபோல் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்பி உபேந்திர குஷ்வாஹா மற்றும் பாஜ எம்பி வரண் காந்தி ஆகியோரும் ராணுவ வீரர் சேர்ப்பு ஆவணத்தை டிவிட்டரில் பதிவிட்டு கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.