சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை எம்பியாக அண்மையில் அறிவிக்கப்பட்டனர். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா அமெரிக்கா சென்றிருந்ததால் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று முன்தினம், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நியமன எம்பிக்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவில் இருந்த காரணத்தால் இளையராஜாவால் பதவியேற்பு விழாவுக்கு வர இயலவில்லை.
இந்நிலையில், இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு இளையராஜா நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பாஜக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட திரைத் துறையினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் விரைவில் டெல்லி சென்று நியமன எம்பியாக இளையராஜா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.