தெஹ்ரான்: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஈரானின் ஆதரவை பெறுவதற்காக ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
கடந்த பிப்ரவரியில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து தனது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக புதின் செவாய்க்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றிருக்கிறார்.
இப்பயணத்தில் புதின் ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். உலகளவில் நிலவும் உணவு நெருக்கடிகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
உக்ரைனில் ரஷ்ய போர் குறித்து, ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி பொமெனி கூறும்போது, “ஈரான் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நேட்டோ படைகள் ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தியிருக்கும். மேற்கத்திய நாடுகள் சுதந்திரமான மற்றும் வலுவான ரஷ்யாவை எதிர்கின்றன” என தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்தார். இப்பயணத்திற்கு எதிர்வினையாகவும், உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு இருக்கும் ஆதாரவை காண்பிப்பதற்காகவே புதின் இப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
மேலும், ஈரான் – ரஷ்யா இரு நாடுகளும் மேற்கத்திய நாடுகளிலிருந்து பொருளாதாரத் தடைகளை சந்தித்துள்ள சூழலில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியதுவம் பெறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மாதக் கணக்கில் இந்தப் போர் தொடர்ந்து நடக்கிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள சீவிரோடோநெட்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.