கோவை விமான நிலையம் அருகே உள்ள ஜி.ஆர்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கொடிசியா அருகே மூன்று திருநங்கைகள் சாலையில் வரும் வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒரு திருநங்கை , பிரதீப்பின் கார் அருகே வர, தன் பர்சில் இருந்து 10 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து ஆசீர்வாதம் செய்வதுபோல அருகே வந்த அந்த திருநங்கை, பிரதீப்பின் பர்சை பறித்து அதில் இருந்து ரூ.8,000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுவிட்டார். நடந்தது என்னவென்று புரியாமல் இருந்த பிரதீப்புக்கு, இந்த அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது நேரம் எடுத்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில், பிரதீப் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், பிரதீப்பிடம் பணம் பறித்தது கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை இளவஞ்சி என்று தெரியவந்தது.
உடனடியாக இளவஞ்சியை கைது செய்த போலீஸ், அவரிடம் இருந்து ரூ.3,000 மீட்டனர். கடந்த வாரம் துடியலூர் அருகே ஓர் ஆண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 திருநங்கைகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருநங்கைகள் பலரும் சுயதொழில், வேலைக்கு சென்று சாதித்து வருகின்றனர். விதிவிலக்காக ஒருசில திருநங்கைகள் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்களை கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.