உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டன. அதனாலேயே அது பரபரப்புச் செய்திகள் பட்டியலில் இருந்தும் விலக்கப்பட்டுவிட்டன. ஆனால், போரின் கொடுமையைச் சொல்லும் செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன.
பலம் வாய்ந்த ரஷ்யாவுடன் விடாப்பிடியாக உக்ரைன் போரில் ஈடுபட்டிருப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன மாதிரியான கற்பிதங்களைக் கொடுக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால், சொந்த நாட்டுக்காக சுதந்திரத்துக்காக உரிமைக்காக போரிடுபவர்களிடம் கேட்டால் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும்.
உக்ரைன் யுத்தக் களத்தில் இருந்து வீடு திரும்பிய ராணுவ வீராங்கனை தன் மகனுடன் இணையும் அந்தத் தருணம் அவர் தரப்பிலிருக்கும் நியாயத்திற்கு சாட்சியாக இருக்கிறது.
அந்த வீடியோவைப் பகிர்ந்த அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆன்டன் கெராஸ்சென்கோ, இதற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம் என்று தலைப்பிட்டுள்ளார்.
வீடியோவில் தாயைக் காணும் குழந்தை முகத்தில் கைகளை வைத்து மூடிக்கொண்டு ஒளிந்து கொள்கிறது. அன்னை அருகில் வரவும் துள்ளி ஓடி கட்டிக் கொள்கிறது. பின்னால் ஒரு செல்லப்பிராணியும் வாய் திறந்து பேச இயலாமல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது.
இந்தக் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் போரால் அந்நாட்டைச் சேர்ந்த கோடிக் கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். போலந்து பெருமளவில் உக்ரைன் அகதிகளை வரவேற்றுள்ளது. ஓரிரவு ரயில் பயணத்தில் சொந்த பூமியை அடையலாம். ஆனால் அங்கே என்ன இருக்கிறது? வீடுகள் இல்லை, வேலை இல்லை, உயிருக்கு உயிரானவர்களையும் இழந்திருக்கிறோம்… இன்னுமிருக்கும் உயிராவது இருக்கட்டும் என்றே உக்ரேனியர்கள் அண்டை நாடுகளில் தஞ்சமெனக் கிடக்கிறார்கள். தாயும் சேயும் இணைந்ததுபோல். தாய்நாட்டுடன் இணைய.
ஏ ஃபேர்வல் டூ ஆர்ம்ஸ் (A Farewell to Arms) புத்தகத்தில் எர்னஸ்ட் ஹெமிங்வே, இப்படி எழுதியிருப்பார். அன்பே நான் இப்போது துணிச்சல்காரன் அல்ல. நான் உடைந்திருக்கிறேன். அவர்கள் என்னை உடைத்துவிட்டார்கள் (“I’m not brave any more darling. I’m all broken. They’ve broken me.”) என்று எழுதியிருப்பார்.
போர் உடைந்து போகச் செய்வதைத் தவிர எதையுமே தராது.