புதுடெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் 78 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் 2015-ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை மொத்தம் 9.24 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டில் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.
2019-ம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020-ம் ஆண்டில் 85,256 பேரும், 2021-ம் ஆண்டில் 1,63,370 பேரும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 3,92,643 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். இவா்கள் அனைவரும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர்.
இவர்களில் அதிகபட்சமாக 1,70,795 பேர் அமெரிக்க குடியுரிமையும், 64,071 பேர் கனடா குடியுரிமையும், 58,391 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 35,435 பேர் பிரிட்டன் குடியுரிமையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.