கோவையில் கஞ்சாவை சாக்லெட் வடிவில் விற்பனை செய்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாகவும், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரெங்கே கவுடர் வீதியில் டீக்கடை நடத்திவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேத்தன் என்பவர் கஞ்சா சாக்லெட்டுகளை விற்று வருவது தெரியவந்தது.
இதனையடுத்து வடமாநில இளைஞர் சேத்தனை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கஞ்சா சாக்லெட் விற்பனையில் சேத்தனுடன் மேலும் சிலர் இணைந்து ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சா சாக்லெட் விற்பனையில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா சாக்லெட்டை பயன்படுத்துபவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. கஞ்சா சாக்லெட் விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த காவல் நிலையங்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM