இரவின் நிழல் படத்திருந்து முதலில் வெளியேறினேன் : கலை இயக்குனர் விஜய்முருகன்
அண்மையில் வெளியாகி இருக்கும் பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள 'இரவின் நிழல்' படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர் விஜய் முருகன். இவர் நடிகரும் கூட. படத்திற்காக அமைக்கப்பட்ட நகரும் மற்ற நகரா அரங்குகள் பற்றி பேசப்படுகிறது.
இதுகுறித்து விஜய் முருகன் கூறியதாவது: நான் முதலில் பணியாற்றிய படம் சார்லி சாப்ளின். அதன் பிறகு அரவான், குடைக்குள் மழை, சுறா, பரமசிவம், ஜனா, கதை திரைக்கதை வசனம், ஜிகர்தண்டா, இறைவி, விஐபி, மாரி, கோலிசோடா எங்கிட்ட மோதாதே, சத்ரியன் படங்களில் பணியாற்றி இருக்கிறேன். எனது 50வது படம் இரவின் நிழல்.
இயக்குனர் பார்த்திபனுடன் 20 ஆண்டுகளாகப் பயணம் செய்கிறேன். அவரது 5 படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய போது கூட முதலில் இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று நான் நினைத்தேன். அவர் நினைப்பதெல்லாம் சாத்தியப்படுமா என்று சில சந்தேகங்கள் எனக்கு இருந்தன. அவை கருத்து முரண்பாடுகளாக மாறின. எனவே வெளியேறி விட்டேன். ஒரு கட்டத்தில் அவர் இப்படி சினிமாவில் புதிதாக முயற்சி செய்ய நினைக்கும்போது அப்படி நினைப்பதை சாத்தியப்படுத்திப் பார்த்தால் தான் என்ன என்று தோன்றியது. இந்த முயற்சியில் பங்கெடுத்தால் என்ன என்று தோன்றி மீண்டும் வந்து இணைந்து விட்டேன்.
23 நாள் முழுமையான படப்பிடிப்பு நடந்தது. 72 இடங்களில் 59 செட்கள் போடப்பட்டன. செட்டின் பின்னிணைக்காக போடப்பட்ட செட்களையும் சேர்த்தால் 72 செட்கள் வரும். இதற்காக நாங்கள் இடம் தேடிப் போன போது கேளம்பாக்கம் அருகே ஒரு இடத்தைக் கண்டுபிடித்தோம். அது 60 முதல் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம்.
கேமரா முதல் காட்சி ஒளிப்பதிவு செய்ய ஆரம்பித்ததில் இருந்து இறுதிக்காட்சி முடியும் வரை தங்கு தடையின்றி அந்தக் கேமரா பயணம் செய்யுமாறு கேமராவின் பயணத்துக்கு ஏற்றபடி அமைக்க வேண்டும். அதில் பல்வேறு வகையான பின்புலங்களையும் நிகழ்விடங்களையும் 1970, 1980, 2000, 2010, 2020 என்று பல்வேறு கால கட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் இந்த அரங்குகள் இருக்க வேண்டும் என்பது பெரிய சவால்தான்.
நான் போட்ட இந்த செட்கள் நகரும்படியாகவும், திறந்து மூடும் படியாகவும் படப்பிடிப்புக்கு ஏற்ற வரையில் வடிவமைப்பது தான் பெரிய சவால். முன்னே நகர்ந்து வளைந்து ஏறக்குறைய வட்டமாக சுற்றி வரும் நிலையில் இந்த அரங்குகளின் அமைப்பு வேலைகளைச் செய்தோம். அந்த செட்களை அமைப்பதற்கு இடங்களைக் கண்டறிந்து அடையாளம் இடுவதற்கே 18 நாட்கள் எடுத்துக்கொண்டோம். இதைப் போட்டு முடிக்க சுமார் 4000 தொழிலாளர்களின் உழைப்பு நாட்கள் தேவைப்பட்டது.
படப்பிடிப்பு நடக்கும்போது எனக்கு உதவியாக சுமார் 30 உதவியாளர்கள் இருக்க வேண்டும். அவ்வளவு பேருக்கும் ஊதியம் கொடுப்பதும் பெரிய சவாலாக இருந்தது. எனவே கவின் கலைக் கல்லூரி மாணவர்களை உதவியாளர்களாக வைத்துக் கொண்டேன். அனைவருமே துடிப்புடன் இருந்து ஒத்துழைத்ததால் தான் இந்தப் படத்தை இவ்வளவு வெற்றிகரமாக எடுக்க முடிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.