வாஷிங்டன்,
உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா பின்பு, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24ந்தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த போரானது தொடர்ந்து பல மாதங்களாக நீடித்து வருகிறது.
போரால் உக்ரைனின் நாட்டில் வீரர்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷிய தரப்பில் வீரர்கள், ஆயுதங்கள் ஆகிய இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்து அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.
போரை நீட்டிப்பது உலகில் வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளும் எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருள் பற்றாக்குறை உள்ளிட்ட மறைமுக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. போரை கைவிடும் வகையில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளும் பலனிக்காமல் போய்விட்டன.
எனினும், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் நிதி சார்ந்த உதவிகளை அளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மே மாதத்தில் அமெரிக்க அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன் உக்ரைனுக்கு சென்றார்.
அவர், உக்ரைனின் முதல் பெண்மணி மற்றும் உக்ரைன் அதிபரின் மனைவியான ஒலெனா ஜெலன்ஸ்காவை அன்னையர் தினத்தில் சந்தித்து பேசினார். போரால் தப்பி வந்த பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து, ஒலெனா ஜெலன்ஸ்கா மரியாதை நிமித்தம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கனை சந்தித்து பேசினார். இதன்பின்பு நேற்று மதியம் வெள்ளை மாளிகைக்கு சென்று சேர்ந்த அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பைடனின் மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.
உக்ரைனின் தேசிய கொடியின் வண்ணம் கொண்ட மஞ்சள் சூரியகாந்தி பூக்கள், நீல வண்ண ஹைடிராங்கியாஸ் வகை பூக்கள் மற்றும் வெண்மையான ஆர்கிட் பூக்கள் அடங்கிய பூங்கொத்துகளை கொடுத்து அவரை பைடன் வரவேற்றார்.
உறுதிதன்மை மற்றும் மீள்தன்மை ஆகியவற்றை கொண்ட நாட்டில் இருந்து, அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் உக்ரைனின் முதல் பெண்மணி ஒலெனா ஜெலன்ஸ்கா இருக்கிறார். வெள்ளை மாளிகைக்கு அவரை வரவேற்பதில் ஜில் மற்றும் எனக்கு கவுரவம் அளிக்கும் விசயம் என அதிபர் பைடன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.