அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் கட்சிக்கு விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை எனவும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை தான் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்குவதாக அடுத்தடுத்து பட்டியல்களை வெளியிட்டனர்.
இதனிடையே கடந்த சில நாட்களாக அதிமுகவின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட வருகிறது. அதன்படி, அதிமுக பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை பொது செயலாளர் நந்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, தலைமை நிலைய செயலாளராக எஸ்பி வேலுமணி, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்னி கிருஷ்ணமூர்த்தி ஆகிய நியமிக்கப்பட்டனர். அதேபோல அதிமுகவின் புதிய அமைப்பு செயலாளர்களாகவும் பல முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், முன்னாள் அமைச்சர்களான ஜெய்குமார், பொன்னையன், செங்கோட்டையன், தங்கமணி, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் ஆகியோருக்கு பதவிகள் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ் என்ற ஒருவரை சமாளிக்க எத்தனை பதவிகளை தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதா என சில முன்னாள் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பை சிறிது சிறிதாக வளைத்து வரும் ஓபிஎஸ் தரப்புக்கு இந்த தகவல் சென்றுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பை மறைமுகமாக மட்டுமே அணுக வேண்டும் எனவும், அவர்களாகவே நம் பக்கம் வருவார்கள் என ஓ.பி.எஸ் தரப்பு எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.