குமரி மாவட்டம் இடைக்கோடு அருகே உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருவருக்குள் ஏற்பட்ட கைகலப்பு மரணத்தில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் இடைக்கோடு அருகே குடுக்கச்சிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் மற்றும் ஸ்டான்லி. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தாஸ் – காங்கிரஸ் கட்சிக்காகவும், ஸ்டான்லி – அதிமுக கட்சிக்காகவும் பணி செய்துள்ளனர். அன்றைய தினமே இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் அதிலிருந்து இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் குடிபோதையில் ஆட்டோவில் வந்து இறங்கிய ஸ்டான்லி, தாஸுடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து ஸ்டான்லி, தாஸை பிடித்து தள்ளி உள்ளார். இதில் நிலை தடுமாறி தாஸ் பக்கத்தில் இருந்த மதில் சுவரில் மோதியுள்ளார்.
இதில் தாஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மயக்க நிலைக்கு சென்றவரை பொதுமக்கள் மீட்டு அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, காயம் பலமாக இருந்ததால் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இவரது குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் ஸ்டான்லியை அருமனை காவல்துறையினர் இன்று கைதுசெய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM