புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 12 வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதல் நாளில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் போராட்டம் நடத்தியதால் அவைகள் முடங்கின. இதையடுத்து அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், மக்களவையில் நேற்று காலை, 2-ம் நாள் கூட்டம் தொடங்கியவுடன் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மறுக்கப்பட்டதால் மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். அவையின் மையப்பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் – குழப்பம் நிலவியது
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியை தொடர்ந்து, அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால் இன்று காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அக்னிபாதைத் திட்டம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் ஆலோசனை
இந்நிலையில் மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசின் திட்டங்கள், மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அவையில் மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றுவது தொடர்பாக அவர் அந்தந்த துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இந்த ஆலோசனையை நடத்தினார். இந்தக் கூட்டத் தொடரின்போது 32 மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.