தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் வழக்கத்தைவிட நிகழாண்டு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவை மிச்சப்படுத்தி உள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவை சாகுபடியில் குறுகியகால ரகங்களான 110 நாள் வயது உடைய நெல் ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்வது வழக்கம். இதற்காக பம்பு செட் மற்றும் காவிரி நீரைக் கொண்டு வயலில் உழவு மேற்கொள்வது, சமப்படுத்துவது, நாற்றங்கால் தயாரிப்பது, நாற்று விடுவது, நாற்று பறிப்பது, நடவு செய்வது ஆகிய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் வேளாண் துறையின் சார்பில், நேரடி நெல் விதைப்புக்கு விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருவதுடன், தண்ணீரை மிச்சப்படுத்துவதுடன் செலவுத் தொகையையும் மிச்சப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
அதன்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,050 ஏக்கராக இருந்த நேரடி நெல் விதைப்புபரப்பளவு, நிகழாண்டு 4,982 ஏக்கராக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரத்தநாடு, பேராவூரணி பகுதியில் அதிக அளவில் நேரடிநெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, கும்பகோணம் அருகே கொத்தங்குடி பகுதியிலும் இந்தாண்டு முதன்முறையாக அப்பகுதி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 16 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில், நிகழாண்டு இதுவரை 20 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும், விவசாயிகள் கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு குறுவை பருவத்தில் அதிக அளவில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேலஉளூர்ப.ஜெகதீசன் கூறும்போது, ”டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளுக்குத் தேவையான விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விவசாயத்துக்கான நெற்பயிர் நடவு செய்ய செலவும் அதிகரித்துக் காணப்படுகிறது.
செலவை மிச்சப்படுத்துவதுடன், உரிய நேரத்தில் சாகுபடி மேற்கொள்ள நேரடி நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை மிச்சப்படுத்த முடிகிறது.
இந்த குறுவை பருவத்தில் ஆடுதுறை 43, கோ 51, திருப்பதி சாரம் 5, ஏஎஸ்டி 16 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்து நேரடி நெல் விதைப்புக்குப் பயன்படுத்துகிறோம். நேரடி நெல் விதைப்பு செய்வதால் பெரிய அளவில்தூர் வெடிக்கிறது. இதனால் நெல் மகசூல் ஓரளவுக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், ”நெல் நாற்று விட்டு, நாற்றுபறித்து, நடவு செய்வது பழைய முறை. ஆனால் தற்போது நேரடியாக நெல்லை வயலில் தெளிக்கும்போது, அது மண் வளத்துக்கு ஏற்றவாறு முளை விட்டுத் தூர் கட்டும்.
அதே நேரத்தில் தண்ணீர் பாய்ச்சலும், காய்ச்சலுமாக இருக்குமானால் அதிகமாக தூர் வெடித்து, மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நேரடியாக நெல் முளைத்து தூர் கட்டும்போது, நோய் எதிர்ப்புத்திறன் நெற்பயிருக்கு அதிகம் கிடைக்கிறது. எனவே இந்த முறையைக் கடந்த சில காலங்களாக விவசாயிகள் அதிகளவில் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதில் 25 சதவீதம் மகசூல்குறைவாகக் கிடைத்தாலும், சாகுபடி செலவைஒப்பிடும்போது சமமாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டு 25 சதவீதம் நேரடி நெல் விதைப்பு பரப்பளவு அதிகரித்துள்ளது” என்றனர்.