புதுச்சேரி: ஏனாமில் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்வதற்காக சென்ற ஆளுநர் தமிழிசையை வரவேற்பதில் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக ஆளுநர் தமிழிசை சென்றார். மண்டல நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகள் வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜனுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது, வெளியே திரண்டிருந்த இருதரப்பினர் மாறி மாறி போட்டி முழக்கங்களை எழுப்பினர். என்.ஆர் காங்கிரஸை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணராவ் தலைமையில் ஒரு கோஷ்டியும், பா.ஜ.க., எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் தலைமையில் ஒரு கோஷ்டியும் மோதிக்கொண்டனர். போலீசார் அவா்களை அப்போது விரட்டியடித்தனர். முன்னதாக தமிழிசையை வரவேற்கும் போதும் யார் முதலில் வரவேற்பது என இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீசார் அவர்களை சமாதானம் படுத்தி அனுப்பிய நிலையில் மீண்டும் இருதரப்பினரும் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.