உபா சட்டத்தின்கீழ் கடந்த 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக 796 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 18ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அடிக்கடி அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதற்க்கு மத்தியில், உபா சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை இன்று மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளது.
அதில், தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு 796 வழக்குகள் உபா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 80 பேர் மீதான குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும், 116 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், 6482 பேர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, 5027 உபா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்ததாகவும், அதில் 212 பேர் மீதான குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.