வாஷிங்டன்: அமெரிக்காவில் தன்பாலீர்ப்பாளர்கள் திருமணத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கான மசோதா நிறைவேறியுள்ளது.
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெரும் விவாதத்தையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன்பாலின திருமண அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற அச்சம் நிலவியது. இதனைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் இந்த மசோதா பெற்றது. மசோதா நிறைவேற்றத்தின்போது அனைத்து உறுப்பினர்களும் மசோதாவை வரவேற்றனர். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை வலுவாக இருப்பதால் இங்கு இம்மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
எனினும், பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய இந்த மசோதா குடியரசுக் கட்சி ஆதிக்கம் வகிக்கும் செனட் சபையில் செல்லும்படியாகுமா என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்த மசோதா மூலம் ஒரு மாகாணத்தில் தன்பாலின திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களிலும் செல்லுபடியாகும். இம்மசோதாவை சமூக நல ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில், தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் இம்மசோதாவுக்கு பிற்போக்குவாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.