கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: `பாஜக-வின் விசாரணை குழு இரண்டு நாள்களில் அமைக்கப்படும்’ – அண்ணாமலை

சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பா.ஜ.க-வின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆடிட்டர் ரமேஷ் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.கவினர் தேர்தல் வாக்குறுதியில் இரண்டு மாதம் மின் கட்டணம் என்பதை ஒரு மாதமாக கொண்டு வரப்படும், இதனால் மக்களுக்கு வருடத்திற்கு 6,000 ரூபாய் சேமிப்பு ஆகும் என்றெல்லாம் கூறி தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இது மக்களின் தலையில் கல்லை போட்டது போல உள்ளது. மத்திய அரசின் நிர்பந்தத்தால் மின் கட்டணம் உயர்த்தியதாக கூறும் தி.மு.க., அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

குறிப்பாக மத்திய அரசின் மின் மானியம் கிடைக்க வேண்டுமென்றால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்தால் மின் மானியம் கிடைக்கும் என தெரிவித்திருந்தது.

ஆனால் மத்திய அரசின் மானியத்தை ஏற்று கொள்ளாமல் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி தற்போது நஷ்டம் ஏற்பட்டதால் மின் கட்டணத்தை உயர்த்தியதாக காரணம் கூறி வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. அதனை சரி செய்தாலே மின்மிகு மாநிலமாக இருக்கும்” என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது, “தமிழ்நாட்டில் மூன்று விஷயங்கள் சரி செய்தாலே மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக திகழும். தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை தவிர்க்க வேண்டும், அனல் மின் நிலையங்களில் 60 சதவீதம் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. அதனை 80 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

சோலார் மின் சக்தி அமைக்க தமிழ்நாடு அரசு லஞ்சம் வாங்குகின்றனர். எனவே தான் சோலார் பொருத்துவதற்கு தயங்குகின்றனர் மக்கள். இதை சரி செய்து ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு 24 மணி நேரத்தில் சோலார் இணைப்பு பெற வசதி செய்து தரப்பட வேண்டும்.

இதை எல்லாம் தி.மு.க., அரசு செய்யாமல் மின் பற்றாக்குறை எனக் கூறியும், மத்திய அரசு நிர்பந்தத்தினால் தான் மட்டுமே மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் வருகின்ற 23-ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதன் பின்பும் தமிழக அரசு மின் உயர்வை குறைக்காவிட்டால் அனைத்து மின்வாரிய அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” எனவும் தெரிவித்தார்.

“கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு கையாண்ட விதம் என்பது மிகவும் வருத்தத்தை அளித்து வருகிறது. சம்பவம் நடந்ததிலிருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், பல்வேறு சேதங்கள் ஏற்பட்ட பிறகு பார்வையிடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக உளவுத்துறை என்ன செய்து வந்தது. முறையான தகவல் எதுவும் தெரிவிக்காமல், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதுமான காவலர்கள் இல்லாமல் போலீஸார் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி., எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இன்று திடீரென மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் மாற்றி நடவடிக்கை எடுத்து விட்டதாக கண்துடைப்பு வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது.

மேலும் கடந்த ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் நடந்த சிறுமியின் மரணத்திற்கு தமிழ்நாடு பா.ஜ.கவின் மூலம் அமைக்கப்பட்ட தனிக்குழு போன்று, இந்த வழக்கையும் இரண்டு நாள்களில் கையில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.