கள்ளக்குறிச்சி விவகாரம்: தொடரும் கைது நடவடிக்கை; யூடியூப் சேனல்களை முடக்கவும் திட்டம்

கள்ளக்குறிச்சி போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக பல பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் தவறான தகவல்களை பரப்புபவர்களின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட்டு பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
image
இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் சட்ட விரோதமாகவும் – அரசுக்கு எதிராக செயல்பட தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 22) மற்றும் உடுமலையை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 20) ஆகிய இரண்டு பேரை திருப்பூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்றைய தினம் இதே காரணத்துக்காக திண்டுக்கல்லை அடுத்துள்ள GTN கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் உதயகுமார் மற்றும் பார்வதி கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் (17 வயதுடைய மற்றொரு கல்லூரி மாணவன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் சேர்ந்து JusticeSrimathi என வாட்ஸ்அப் குழு ஒன்றை துவங்கி அது வழியாக சில தவறான கருத்துகளை பதிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பும் வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களை முடக்கவும், கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட வீடியோ பதிவுகளை நீக்கவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மீறும் சேனல்கள் முடக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.