காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் தலைவர் ஹல்தரிடம் முறையிடப்பட்டது. இதற்கு ஆணையமும் அனுமதி அளித்த நிலையில், இது உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூறி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கின் விசாரணை இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி கண்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, 2018-ம் ஆண்டு முதல் இப்போது வரை உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு முறையாக நீர் பங்கீடு செய்யவில்லை என்றும், இந்தச் சூழலில் புதிய அணை கட்டினால், கீழ்பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களுக்கு முறையாக நீர் பங்கீடு கிடைக்காது என்றும் வாதத்தை முன்வைத்தார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். தமிழக அரசின் வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர், கர்நாடக அரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அணை கட்டப்படுவதால் கீழ் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களுக்கு நீர் பிரச்சனை இருக்காது எனவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள இவ்வழக்கில் தேவையற்ற வழக்கு எனவும் வாதிட்டார்.
இரண்டு தரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதி கண்வில்கர் அமர்வு, இவ்வழக்கில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அறிய வேண்டி உள்ளதால் வழக்கை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தது. திட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்தலாம் என்றும், ஆனால் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM