டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றிய அரசு ஏஜென்ட் போன்று செயல்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் காவிரி மேலாண்மை வாரியம் நியாயப்படி நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நீர்வள ஆணையமும் காவிரி மேலாண்மை ஆணையமும் முறையாக செயல்பட்டிருந்தால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது என்றும் அமைச்சர் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பால் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் உள்ள மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொள்வாரகள் என்றார். இதனிடையே காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து முடிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16 -வது கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. காவிரி ஆணையக்கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை மூன்று நிதிபதிகள் அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆணையத்தின் கூட்டத்திற்கு தடை இல்லை என்று தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்து விவாதிக்க அனுமதியளித்துள்ள நீதிபதிகள் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக எந்த முடிவையும் காவிரி நீர் மேலாண் ஆணையம் எடுக்ககூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். மேகதாது அணை குறித்து விவாதிக்கலாமா என்பதை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்து அறிய விரும்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை இவர் 26 -ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.