பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றதால் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர் மீண்டும் பணியமர்த்தப்பட்டார். அந்த தொழிலாளியை பணி நீக்கம் செய்தமைக்கு பரவலாக சமூக வலைதளங்களில் கிளம்பிய எதிர்ப்பின் விளைவாக அவர் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இது குறித்து மதுரா விருந்தாவன் நகராட்சி ஆணையர் அருணயா ஜா கூறுகையில், “சம்பந்தப்பட்ட தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று எச்சரிக்கையுடன் அந்த நபர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
நடந்தது என்ன? கடந்த சனிக்கிழமையன்று சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியானது. அதில் ஒரு இரும்பு வண்டியில் தூய்மைப் பணியாளர் ஒருவர் குப்பைகளோடு சேர்த்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை அள்ளிவைத்திருப்பது தெரிந்தது. அந்த துப்புரவு தொழிலாளி பாபி என்பதும் அவர் ஜெனரல்கஞ்ச் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. குப்பையில் பிரதமர், முதல்வர் படத்தை எடுத்துச் செல்வதா என்று கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இதனையடுத்து பணியில் பொறுப்புடன் நடக்கவில்லை எனக் கூறி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் ஒப்பந்த தொழிலாளராகவே பணியாற்றி வந்தார். நிலையற்ற வருமானம் குறைவான கூலி என வாழ்ந்துவந்த பாபிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இது மிகப்பெரிய தண்டனையாக அமைந்தது.
பின்னர் பாபி நகராட்சி ஆணையரை சந்தித்து விளக்கமளித்தார். நான் வழக்கம்போல் ஜெனரல்கஞ்ச் தெருவில் குப்பை அள்ளிக் கொண்டிருந்தேன். யாரோ இந்தப் படங்களை குப்பையில் வீசியிருந்தனர். நான் அதையும் சேர்த்து அள்ளி வண்டியில் கொட்டினேன். அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது சிலர் என்னை வசைபாடினர். அதில் ஒருவர் இரண்டு படங்களை எடுத்து கழுவி தன்னுடன் எடுத்துச் சென்றார்.
ஒருபடம் கண்ணாடி உடைந்து சேதமடைந்திருந்ததால் யாரும் எடுக்கவில்லை. எனக்கு உண்மையில் நிலைமையின் தீவிரம் புரியவில்லை. என் பணி குப்பைகளை அகற்றுவது. அதை மட்டுமே நான் செய்தேன் என்று விளக்கியுள்ளார். இதற்கிடையில் பாபி பணி நீக்க செய்திக்கும் சமூக வலைதளங்களில் கண்டனம் கிளம்பின. இதனையடுத்து பாபி மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.