கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை களையச்சொல்லி தேர்வு எழுதக் கூறிய சர்ச்சையில் 5 பெண்களை அம்மாநில காவல் துறை கைது செய்துள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் அயூரில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி, அதன்பின் தேர்வு எழுத அனுமதித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மாணவியின் தந்தை அளித்த புகாரில் அம்மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இவ்வழக்கில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் தேசிய தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகி உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இவ்விவகாரம் உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள தேசிய தேர்வுகள் முகமை உயர் அதிகாரிகள் கொல்லம் சென்று விசாரணை நடத்த உள்ளது. முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக கொல்லம் பகுதியில் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். நீட் தேர்வு மையமாக செயல்பட்ட கல்வி நிறுவனத்தின் முன் நடந்த இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. கல்வி நிறுவனத்தின் ஜன்னல்கள் அடித்து உடைக்கப்பட்டன. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM